போலி பீடிகள் விற்ற 2 பேர் கைது

நிலக்கோட்டை அருகே போலி பீடிகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-04 23:30 GMT

மதுரை மாவட்டம் கோசி கடை பகுதியை சேர்ந்த தங்கராசு (வயது 51). இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பீடி நிறுவனத்தின் விற்பனையாளராக உள்ளார். இவருக்கு, நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டி சவுடம்மன்கோவில் பகுதியில் அந்த நிறுவனத்தின் போலி பீடிகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு அவர் சென்றார். அப்போது ஒரு சாக்கு மூட்டை வைத்து கொண்டு சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அந்த சாக்கு மூட்டையில் 20 பண்டல்கள் போலி பீடிகள் விற்பனைக்கு வைத்திருந்தனர். உடனே அவர்களை பிடித்து விளாம்பட்டி போலீசில் தங்கராசு ஒப்படைத்தார். மேலும் அவர்கள் மீது புகார் கொடுத்தார்.

அதன்பேரில் நடந்த விசாரணையில் அவர்கள், திண்டுக்கல், பேகம்பூரை சேர்ந்த காஜா முகைதீன் (54), திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (52) என்றும், தனியார் நிறுவனத்தின்பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்