சிறுமலையில் கேளையாட்டை வேட்டையாடிய 2 பேர் கைது
சிறுமலையில் கேளையாட்டை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே அஞ்சுக்குழிபட்டி பகுதியில் சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சிறுமலையை அடுத்த தாளக்கடையை சேர்ந்த கருப்பையா (வயது 40), மூக்கராஜ் (30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் சிறுமலையில் கேளையாட்டை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 கிலோ கேளையாட்டு இறைச்சி, தோல், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.