அரசு பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருட்டு
ஆலங்குடி அருகே அரசு பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட குப்பகுடி ஊராட்சி கல்யாணபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 137 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல் பள்ளியை திறக்க ஆசிரியர்கள் வந்தனர். அப்போது பள்ளியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அலுவலக அறையில் வைக்கப்பட்டு இருந்த 2 மடிக்கணினிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியில் ஏற்கனவே 2 முறை மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.