தமிழக அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப்பட்டியலை ஏப்ரலில் வெளியிடுவேன்

Update: 2022-12-20 17:07 GMT


முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க.எம்.எல்.ஏ.க்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துப்பட்டியலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிடுவேன் என்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல்

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவில்வழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சியில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுவால் குடும்ப தலைவரை இழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் 3 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலியை அண்ணாமலை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது ஊழல் என்று தான் சொல்வார்கள். ஊழலின் ஆழம் என்பது ஒரு தலைமுறையை அழித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தி.மு.க.வினர் நான் கட்டியிருக்கும் கைக்கெடிகாரத்துக்கு பில் வேண்டும் என்றனர். நானும் கைக்கெடிக்காரத்துக்கான பில் கொடுப்பதற்கான தேதி, நேரம் குறிப்பிட்டு விட்டேன். கைக்கெடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன் என்பது குறித்து முழு ஆதாரத்தை கொடுக்க உள்ளேன்.

சொத்துக்கணக்குகளை வெளியிடுவேன்

கெடிகார பில் மட்டுமல்ல, 13 ஆண்டுகளாக நான் போலீஸ் அதிகாரியாக இருந்து சம்பாதித்த சொத்து அனைத்தையும் பொதுமக்களிடம் தெரிவிக்கிறேன். அனைத்து வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிப்பேன். நான் மேற்கொள்ள இருக்கிற பாத யாத்திரைக்கு முன்பு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்காக இணையதளம் தொடங்கி வருடம் வாரியாக நான் செலவு செய்த விவரங்கள் அதில் இடம்பெற இருக்கிறது. நான் தி.மு.க.வினரை பார்த்து இதேபோல் நீங்கள் கொடுங்கள் என்று கேட்பதை விட, மக்களாகிய நீங்கள் தி.மு.க.வினரை பார்த்து இதுபோல் சொத்துவிவரங்களை கொடுங்கள் என்று கேட்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்

தி.மு.க. அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்கள் சொத்துப்பட்டியலும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்படும். முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும். நமக்கு தெரிந்தவரை ரூ.2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. முதல்-அமைச்சர் முதல் தி.மு.க. எம்.எல்.ஏ. வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்துப்பட்டியல் வெளியிடப்படும்.

தி.மு.க. அமைச்சர் ஒருவர் இந்தோனேஷியாவில் சொந்தமாக துறைமுகம் வைத்துள்ளார். லஞ்சத்தை ஒழிக்காமல் அடுத்தகட்டத்துக்கு நாம் செல்ல முடியாது. லஞ்சபுகார் கூறும் தகுதி, தைரியம் பா.ஜனதாவுக்கு மட்டுமே உள்ளது. முதல்-அமைச்சரின் மருமகன் கட்டிய கைக்கெடிகாரம் ரூ.14 கோடி. அது என்ன? முதல்-அமைச்சர் பயன்படுத்திய கார் விவரம் என்ன? முதல்-அமைச்சர் இதற்கு முன்பு இருந்தபோது என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆழமாகவும், காரமாகவும், கசப்பாகவும் அவை இருக்கும். ரூ.2 லட்சம் கோடி என்பது 2 தலைமுறையினர் வளர்வதற்கான பணம் ஆகும்.

ரூ.2 லட்சம் கோடி

தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதை சேர்த்து வாங்கியுள்ள 150 ஏக்கர் நிலத்தை வளைத்து போட்டுள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீட் வேண்டாம் என்கிறார்கள். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க செல்லும்போது மக்களிடம் கேட்கும் கேள்வி, ரூ.2 லட்சம் கோடியா?, பா.ஜனதா கட்சியா? என்பதாகத்தான் இருக்கும். திருப்பூரின் முன்னேற்றம் அரசால் வரவில்லை. மக்களின் உழைப்பால் வந்துள்ளது. எந்த அரசும் இதை சொந்தம் கொண்டாட முடியாது.

மேடையில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் ஒற்றுமை இருப்பதாக தெரிவித்தார்கள். அவரின் நக தூசிக்கு கூட நான் ஒப்பாக முடியாது. இருந்தாலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தி.மு.க.வினர் எம்.ஜி.ஆரை கைக்கெடிகாரத்தை வைத்துத்தான் கிண்டல் செய்தார்கள். அதனால் எம்.ஜி.ஆர். ஒரே கைக்கெடிகாரத்தை கட்டியிருந்தார். கைக்கெடிகாரத்துக்குள் வைரம் ஒளித்து வைத்துள்ளார். ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளார் என்று சொன்னார்கள். மறுபடியும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. எனது கைக்கெடிகாரத்தை வைத்து தி.மு.க.ஆட்சியாளர்களின் ரூ.2 லட்சம் கோடியை வெளியே கொண்டு வர வேண்டும்.

மது ஆலைகள்

மதுக்கடையை மூட வேண்டும் என்று தி.மு.க.வினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூறி வந்தனர். வரும் ஏப்ரல் மாதம் நாம் வெளியிடப்படும் பட்டியலில் டி.ஆர்.பாலுவுக்கு எத்தனை மது ஆலைகள் உள்ளன. அதன் சொத்துமதிப்பு விவரம், மாதந்தோறும் அவருடைய மது ஆலையில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகிறது. 60 சதவீதம் மதுபாட்டில்கள் தி.மு.க.வினரின் ஆலைகளில் இருந்து கொடுக்கப்படுகிறது. இவர்கள் எப்படி டாஸ்மாக் கடையை மூடுவார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீலுக்கு ஒரு அமர்வுக்கு கட்டணம் ரூ.25 லட்சம். கரூரில் உள்ள நில ஆவணங்கள் வெளியிடப்படும். ஊழலை தமிழகத்தில் எதிர்க்கும் ஒரே கட்சி பா.ஜனதா கட்சி தான்.

தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு பேசுகிறார். உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் இன்பநிதி வந்தாலும் நான் வாழ்க என்று சொல்வேன் என்கிறார். கே.என்.நேருவின் பேரனுடைய வயதை விட இன்பநிதியின் வயது குறைவு. துரைமுருகன் சொல்கிறார். யார் வந்தாலும் ஜே போடுவேன் என்கிறார். நீங்கள் அடிமையாக இருக்க தயாராக இருக்கிறீர்கள். ஆனால் தமிழக மக்களையும் அடிமையாக இருக்க நினைப்பது முட்டாள்தனம்.

ஏழை மக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு முதல்-அமைச்சர் சிந்திக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க வேண்டும். ரூ.2 லட்சம் கோடிக்கான சொத்துப்பட்டியல், ஊழல் பட்டியலால் ஏப்ரல் மாதம் முதல் களைகட்ட தொடங்கும். மக்கள் நேர்மையின் பக்கம் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்