ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி
சிவகாசி உட்கோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் சுப்பிரமணியபுரம் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பெட்டி, பெட்டியாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அய்யசாமி(வயது 36) என்பவரை கைது செய்தனர். குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்படுவது தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதே போல் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நதிக்குடி கிராமத்தில் இயங்கி வரும் ஒரு பட்டாசு ஆலையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி சக்திகணேசன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பாக வைக்க வேண்டிய பட்டாசுகளை விதிகளை மீறி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி, ஆலையை சேர்ந்த பாலமுருகன்(25) என்பவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.