2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை

வாசுதேவநல்லூர் அருகே, குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-04 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே, குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

நெஞ்சை உருக்கும் இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காதல் திருமணம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30), லாரி டிரைவர்.

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் மீனா (28). செவிலியர்.

முருகனும், மீனாவும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஆத்துவழியில் வசித்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு திவ்யா (6), மோனிஷா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இதில் திவ்யா அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

குடும்ப தொடர்பு இல்லை

முருகனும், மீனாவும் காதல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து மீனாவிற்கும், அவருடைய குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மீனா மனவேதனையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மீனா தனது மகள்கள் திவ்யா, மோனிஷா ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

கிணற்றில் உடல்கள்

நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மீனா, திவ்யா, மோனிஷா ஆகிய 3 பேரின் உடல்கள் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் இந்திராகாந்தி வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து 3 உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தற்கொலை

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மீனா தனது 2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், மீனாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.

குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து சோக முடிவை எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்