ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

Update: 2023-02-19 19:19 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே குளிக்க சென்ற சிறுமிகள் 2 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

குளிக்க சென்ற சிறுமிகள்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி காமராஜ் காலனி கீழத்தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. விவசாய தொழிலாளி. இவருடைய மகள் பிரித்திகா (வயது14). இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே தெருவை சேர்ந்த சவுந்தரராஜன் மகள் குணசுந்தரி (16). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

பிரித்திகா, குணசுந்தரி ஆகிய 2 பேரும் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாகவும், வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளை மேய விட்டு வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஆற்றுக்கு சென்றனர்.

2 பேரும் சாவு

அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை தேடி குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுமிகள் கொண்டு சென்ற 2 அலுமினிய பாத்திரங்களும் மணலில் வைக்கப்பட்டிருந்தன.

துணிகள் துவைத்து காய வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் சிறுமிகளை காணவில்லை. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து சிறுமிகளை தேடினார்கள். அப்போது 2 பேரும் ஆற்றில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உயிரிழந்த பிரித்திகாவின் தாயும், தந்தையும் கேரளாவில் வேலைக்கு சென்றுள்ளனர். தனது சகோதரிகளுடன் பிரித்திகா ஒன்பத்துவேலி கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். 2 சிறுமிகள் ஒரே நேரத்தில் ஆற்றில் மூழ்கி பலியானது அந்த பகுதி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்