கஞ்சா வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-28 20:25 GMT

சேலத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை

சேலம் சின்னனூர் துளசிமணியூர் பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 32). இவர் கடந்த மாதம் 4-ந் தேதி அயோத்தியாப்பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், அழகேசனை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர் ஆந்திராவில் இருந்து ரூ.30 ஆயிரத்திற்கு கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி வீராணம், வலசையூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் அழகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அதேபோல், சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சபீர் (30). இவர் கடந்த மாதம் 8-ந்தேதி வாய்க்கால் பட்டறை முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து சென்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா வியாபாரிகளான அழகேசன், சபீர் ஆகிய இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடமாடும் இடங்களிலும், கூலித்தொழிலாளர்களிடமும் கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர். இதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு அம்மாபேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று அழகேசன், சபீர் ஆகிய 2 பேரையும் மருந்து சரக்கு குற்றவாளிகள் என்ற பிரிவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்