லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பலி
லாரி மீது வேன் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பலி உயிரிழந்தனர்.
லாரி மீது வேன் மோதியது
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, மட்டங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி ஜெயமதி(வயது 53). இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 பெண் பக்தர்களும், மார்கழி மாத பவுணர்மியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வதற்காக ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். அந்த வேனை கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (63) ஓட்டினார்.
நள்ளிரவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வேன் சென்றது. அப்போது அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி லாரியின் பின்புறத்தில் சிக்கி உருக்குலைந்தது.
2 பெண் பக்தர்கள் சாவு
இதனால் வேனில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். மேலும் வேனில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த ஜெயமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் மற்றும் 7 பெண் பக்தர்கள் படுகாயமடைந்தனர். 9 பெண் பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பாடாலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மட்டங்கிப்பட்டியை சேர்ந்த கண்ணனின் மனைவி கோமதி (40) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மற்ற 6 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதற்கிடையே காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், ஜெயமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதில் லேசான காயமடைந்த 9 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் ஏற்பட்டிருந்த போக்குவரத்து பாதிப்பை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டதையடுத்து தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.