வெறி நாய்கள் கடித்து 2 கன்று குட்டிகள் செத்தன

தியாகதுருகம் அருகே வெறி நாய்கள் கடித்து 2 கன்று குட்டிகள் செத்தன

Update: 2023-06-07 18:45 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா மனைவி கோமதி (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான 6 மாடுகள், 2 கன்று குட்டிகளை முடியனூர் கிராம எல்லையில் உள்ள மாட்டுகொட்டகையில், கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கோமதி மாட்டுக்கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 2 கன்றுக்குட்டிகளும் செத்து கிடந்தன. அவற்றை வெறிநாய்கள் கடித்திருப்பது தெரியவந்தது. இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே கொட்டகையில் கட்டியிருந்த கோமதிக்கு சொந்தமான ஒரு ஆட்டு குட்டியும் வெறிநாய்கள் கடித்து செத்து போனது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், விருகாவூர் மற்றும் முடியனூர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித் திரிகின்றன. கடந்த 3 மாதங்களில் சுமார் 10 ஆடுகள் மற்றும் 6 கன்று குட்டிகள் வெறிநாய்கள் கடித்ததில் இறந்து போயுள்ளன. இந்த வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆடு, மாடுகளை கடிக்கும் வெறிநாய்கள் தங்களையும் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்