3 கோவில்களில் திருடிய 2 பேர் கைது

குமரியில் ஒரே நாளில் 3 கோவில்களில் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் ஜாலியாக வலம் வர கோவில்களில் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Update: 2023-08-23 18:45 GMT

திருவட்டார்:

குமரியில் ஒரே நாளில் 3 கோவில்களில் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் ஜாலியாக வலம் வர கோவில்களில் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

3 கோவில்களில் கொள்ளை

திருவட்டார் அருகே கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவில், குட்டைக்காடு வனசாஸ்தா கோவில், தென்னூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர். அம்மன் நகை மற்றும் உண்டியல் பணம், குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இங்கு கைவரிசை காட்டிய ஆசாமிகள் திருட்டு மோட்டார் சைக்கிளில் வலம் வந்து கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கோவில் முன்பு விட்டு சென்ற அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

அதே சமயத்தில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் ஏட்டுகள் பிரபுதாஸ், ஷைலின், ஜெபசுபின் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் சுவாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுவாமியார்மடம் நெடியாங்கோடு மேல்விளை பகுதியை சேர்ந்த சபரீஷ் (வயது 22), 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கோவில்களில் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதில் சபரீஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

காதல் திருமணம்

எனது தந்தை கிரிஷ், சுவாமியார்மடத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தாயார் பிந்து. எனது தங்கை நர்சிங் படித்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்த நான் அதன் பிறகு படிப்பை தொடரவில்லை.

இதனால் சென்ட்ரிங் வேலை செய்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கருங்கல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளான்.

என் மீது மார்த்தாண்டம், திருவட்டார், தக்கலை ஆகிய போலீஸ் நிலையங்களில் இரு சக்கரவாகனம் திருட்டு, கஞ்சா கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ளன. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு என்னுடன் திருட்டு வழக்கில் சிக்கியவருடன் தொடர்பு ஏற்பட்டது. மது, போதை பழக்கம் உடைய நாங்கள் படிப்படியாக கஞ்சா போதைக்கு மாறினோம்.

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளுக்காக...

அப்போது திடீரென விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பார்த்து பொறாமை பட்டோம். இந்த மாதிரி விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாங்களும் வலம் வர வேண்டும் என நினைத்தோம்.

அதற்கு வசதி இல்லாத காரணத்தால் திருடலாம் என திட்டமிட்டு கைவரிசை காட்ட தொடங்கினோம். பகல் நேரத்தில் பெரிய வீடுகள், கோவில்களை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கைவரிசை காட்டினோம்.

கடந்த பிப்ரவரி மாதம் செறுகோல் கும்பளத்தில் உள்ள மகாதேவர் கோவிலில் குத்துவிளக்கு, 6 வெண்கல மணிகளையும், கடந்த 8-ந் தேதி வலியாற்றுமுகம் இசக்கி அம்மன் கோவிலில் கதவை உடைத்து 3 அடி நீளமுள்ள வெண்கல குத்துவிளக்குகளையும் திருடினோம்.

போலீசில் சிக்கினோம்

கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் கண்ணங்கரை வன சாஸ்தா கோவிலில் விளக்குகள், கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் நகை மற்றும் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்த போது அருகில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள் திருடன், திருடன் என சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி சென்றோம்.

அப்போது என்னுடன் வந்த சிறுவனின் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பகுதி நகை கீழே விழுந்து விட்டது. மேலும் செல்போனும், செருப்பும் தொலைந்து விட்டது. பின்னர் உண்டியல் பணத்தை வைத்து செலவழித்தோம். நானும், 17 வயது சிறுவனும் ஏதாவது பெரிய கோவிலில் கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது போலீசிடம் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு சபரீஷ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்