கோவில் அர்ச்சகரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கோவில் அர்ச்சகரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-12 20:04 GMT

செல்போன் பறிப்பு

திருச்சி அரியமங்கலம் அருகே வடக்கு காட்டூர் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 25). இவர் திருச்சி வரகனேரி மாரியம்மன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் கோவிலில் பூஜை செய்வதற்காக கணேஷ் குமார் தனது தம்பி செந்தில்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொண்டு கணேஷ்குமார் தனது செல்போனை பார்த்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கணேஷ்குமார் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கணேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று காலை அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் அரியமங்கலம் கோல்டன் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மேல தேவதானம் கோனார் தோப்பு பகுதியை சேர்ந்த மதன்குமார் (22) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கணேஷ்குமாரின் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மதன்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்