பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த 2 பேரும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (வயது 35), பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த பூபதி (61) என்பது தெரியவந்தது. மேலும் கண்ணன் ஆந்திராவில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கி வந்து, பூபதியிடம் விற்பனை செய்ததும், பூபதி தலா 50 கிராம் பாக்கெட்டுகளாக கஞ்சாவை மாற்றி மாணவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு ஒன்று ரூ.600 என்ற விலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.