காரில் வந்து லாரி திருடிய 2 பேர் கைது
வேலூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை காரில் வந்து திருடி சென்ற 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை காரில் வந்து திருடி சென்ற 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காரில் வந்து லாரி திருட்டு
ராணிப்பேட்டை சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 40). இவருக்கு சொந்தமான லாரி வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பம் விநாயகர் கோவில் அருகே கடந்த 18-ந்தேதி இரவு நிறுத்தப்பட்டிருந்தது. மறுநாள் காலை பார்த்த போது லாரி திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து நித்தியானந்தம் வேலூர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
லாரியை திருடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் பிள்ளையார்குப்பம் மற்றும் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் ஒரு காரில் வருவதும், அதில் ஒருவர் லாரியை திருடிச் செல்வதும் பதிவாகியிருந்தன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து தனிப்படையினர் அந்த கார், லாரி எங்கு சென்றது என்பதை அறிவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், சென்னை, விழுப்புரம், விருதாச்சலம், ஜெயங்கொண்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர். ஆனாலும் லாரி திருட்டில் ஈடுபட்ட 2 பேரின் அடையாளமும் சரியாக தெரியவில்லை.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மூலமாக திருட்டு நடந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான செல்போன் எண்கள் குறித்து ஆய்வு செய்தனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் 2 பேரின் செல்போன் எண்களும் கிடைத்தன.
2 பேர் கைது
அந்த எண்களின் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (36), கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (56) என்பதும், இருவர் மீது 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குற்றவழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. செல்போன் எண்கள் மூலம் அவர்கள் ஒசூரில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும் நாமக்கலை சேர்ந்த ஜெகநாதனிடம் விற்கப்பட்ட லாரியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.