கட்டிட ஒப்பந்ததாரர் அலுவலகத்தில்தாக்கிய 2 பேர் கைது
கட்டிட ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி செல்லிபுரம் தெருவை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் ஜான்சன் (வயது 26). இவர் சேரன்மாதேவி - அம்பை ரோட்டில் அலுவலகம் அமைத்து கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜான் சேவியர் ஜெபஸ்டின் (36), வளன்அரசு ரெத்திஷ் (40) ஆகிய இருவரும் விரோதமடைந்து அவரது அலுவலகத்திற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார்கள். அந்தோணி மைக்கேல் பணம் கொடுக்காத காரணத்தால், இதனை மனதில் வைத்து கொண்டு நேற்று முன்தினம் அவரது அலுவலகத்திற்கு சென்று அவரை அவதூறாக பேசி அலுவலகத்தில் கல்லை கொண்டு வீசி, கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தோணி மைக்கேல் ஜான்சன் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஜான் சேவியர் ஜெபஸ்டின், வளன் அரசு ரெத்திஷ் ஆகியோரை கைது செய்தனர்.