குரூப்-2, 2 ஏ முதல் நிலைத்தேர்வை 19 ஆயிரத்து 612 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதல் நிலைத்தேர்வை 19 ஆயிரத்து 612 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுதவரவில்லை.;

Update:2022-05-22 00:48 IST

புதுக்கோட்டை,

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2, 2 ஏ முதல் நிலைத்தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 82 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு மையத்திற்குள் ஹால்டிக்கெட், அடையாள அட்டையை பரிசோதித்து பலத்த சோதனைக்கு பின் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையத்திற்குள் காலை 9 மணிக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதற்கு முன்பாகவே வந்தனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

3 ஆயிரம் பேர் வரவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வுகளை எழுத 22 ஆயிரத்து 621 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 ஆயிரத்து 612 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுதவரவில்லை.

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். தேர்வினை 82 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 20 சுற்றுக்குழு அலுவலர்களும், 11 பறக்கும் படை அலுவலர்களும், 164 ஆய்வு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் தேர்வு நடைபெற்றதை 88 வீடியோகிராபர்கள் மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. கலெக்டர் ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அபிநயா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கைக்குழந்தைகள்

தேர்வு எழுத கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் சிலர் குழந்தைகளை தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். அந்த குழந்தைகளை அவர்கள் கவனித்து வந்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்