18-ம் படி கருப்பருக்கு சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அடுத்த அய்யாபட்டி 18-ம் படி கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அருகே மேலையூர் ஊராட்சியை சேர்ந்த அய்யாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பதினெட்டாம்படி கருப்பர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று பிரமாண்டமான முறையில் பதினெட்டாம்படி கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சாமி அழைக்கப்பட்டு சாமியாடி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், நோய் நொடியில் இருந்து விலகல் போன்றவற்றிற்கு சாமியாடி அருள் வாக்கு கூறினார்.
அன்னதானம்
முன்னதாக 18-ம் படி கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அய்யாபட்டி, எஸ்.எஸ்.கோட்டை, முறையூர் உள்ளிட்ட சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பக்தர்களும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து 2000 பேருக்கு பிரமாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மேலையூர் அய்யாபட்டி கிராமத்தார்கள், பதினெட்டாம்படி கருப்பர் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.