150-வது பிறந்த நாள் விழா: "அரவிந்தரின் போதனைகள் வாழ்வை நெறிப்படுத்தும்" கவர்னர் பேச்சு

அரவிந்தரின் போதனைகள் வாழ்வை நெறிப்படுத்தும். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2022-08-10 19:09 GMT

சென்னை,

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி, ஆன்மிகவாதி என பன்முகத்தன்மை கொண்ட அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

தமிழக கவர்னரும், ஆரோவில் பவுண்டேசன் தலைவருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் வரவேற்றார்.

நேர்மறையான ஆற்றல்

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்தியா பல்வேறுவிதமான சித்தாத்தங்களை கொண்டுள்ள நாடு. இந்த மண்ணில் பல்வேறு விதமான நெருக்கடிகள் இருந்து வருகின்றன. மனிதர்களிடையே மோதல், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு சவால்களை தினம்தோறும் சந்தித்து வருகிறோம்.

இப்படிப்பட்ட மண்ணில் தான் ஆரோவில் போன்ற புனிதமான இடங்களும் உள்ளன. இந்த இடத்தை, இங்குள்ள இயற்கையை நேசிக்க வேண்டும். ஆரோவில் சென்று வந்தால் ஒருவிதமான நேர்மறையான ஆற்றல் உருவாவதை காண முடியும்.

பின்பற்ற வேண்டும்

இதுபோன்ற இடங்களை பார்வையிட அனைவரையும் வலியுறுத்த வேண்டும். அரவிந்தர் யோகி, தத்துவஞானி, ஆன்மிகவாதி போன்ற பன்முகத்தன்மையை கொண்டவர்.

அரவிந்தரின் போதனைகள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் நெறிப்படுத்தும். அரவிந்தரின் போதனைகளை வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் ஆரோவில் பவுண்டேசன் செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஜெயந்தி ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்