15 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை: 4 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை- சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
15 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த 4 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
15 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த 4 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (25) என்பவர் பழகி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை தெரிந்து கொண்ட மேலும் 5 பேர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதில் ஒருவர் அந்த சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2021-ம் ஆண்டு செல்வராஜ் (25), பொன்னுச்சாமி (23), செல்வம் (30), சிவா (22), குளவாய்ப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (25), சுப்புராயபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (26) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜரானார்.
வழக்கை நீதிபதி சரத்ராஜ் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வராஜ், சிவக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். செந்தில்குமாருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும் அபராத தொகை ரூ.54 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் அத்துடன் தமிழக அரசின் சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். மற்ற 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.