மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15 நாளில் கடன் அனுமதி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-03-28 20:14 GMT

ஜி.கே.மணி கேள்வி

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி (பென்னாகரம்), 'தமிழக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

மகளிர் சுயஉதவி குழுக்கள் நேரடி வங்கி கடன் பெறுவதற்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை 6 மாதம் தவறாமல் குழு கூட்டங்களை நடத்தி சேமிப்பு செய்து உள்கடன் வாங்கி குறித்த காலத்தில் அதனை செலுத்த வேண்டும்.

கணக்கு புத்தகங்களை முறைப்படி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செயல்பாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுயஉதவி கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

15 நாளில் கடன் அனுமதி

சுயஉதவி கடன் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி 21 நாட்களில் சுயஉதவி குழுக்களின் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப்படுகிறது.

21 நாட்கள் மேல் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் மாவட்ட வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதி ஆண்டில் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் இலக்கை விட 22 கோடியே ரூ.19 லட்சம் கூடுதலாக கடன் உதவி அளித்துள்ளோம். இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுயஉதவி குழுக்கள் பயன் அடைந்துள்ளன.

நம்பிக்கை தொகை

2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் இலக்கை ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்தி முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கண்டிப்பாக இந்த இலக்கை விட அதிகமாக கடனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில்தான் முதன் முதலில் கருணாநிதியால் மகளிர் சுயஉதவி குழு தொடங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் தொகையை நாங்கள் கடனாக பார்க்கவில்லை. அவர்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கிற நம்பிக்கை தொகையாகத்தான் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கவனித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் விளக்கத்துக்கு ஜி.கே.மணி நன்றி தெரிவித்தார். அப்போது, நான் அளித்த தெளிவான, ஆழமான விளக்கத்துக்கு நீங்கள் ஆழமான நன்றி தெரிவித்துள்ளீர்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்