மதுரை விமான நிலைய குப்பை தொட்டியில் கிடந்த ரூ.14½ லட்சம் தங்கம்

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை, மதுரை விமான நிலைய குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-01 19:34 GMT

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை, மதுரை விமான நிலைய குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8:20 மணிக்கு துபாயில் இருந்து மதுரைக்கு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 170 பயணிகள் மதுரை வந்தனர்.

பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து அனுப்பி வைத்தனர். அப்போது, விமானத்தில் இருந்து விமான நிலைய உள் வளாக பகுதிக்கு நடந்து வரும் 'ஏரோ பிரிட்ஜ்' பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் களிமண் போன்ற பொருள் கிடந்தது. இதனை கண்ட அங்குள்ள ஊழியர்கள், அந்த பொருள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.14½ லட்சம் மதிப்பு

சுங்கத்துறை அதிகாரிகள் அதனை எடுத்து சோதனை செய்தபோது, அதில் களிமண் போன்ற பொருளுடன் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. மேலும், அதிகாரிகளின் பிடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை குப்பை தொட்டியில் வீசி சென்றதும் தெரியவந்தது.

அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தீயில் வைத்து எரித்து, அதில் கலந்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதில், ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 472 மதிப்புள்ள 281 கிராம் தங்கம் கிடைத்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், விமானத்தில் வந்த பயணிகளின் விவரங்கள் குறித்தும், தங்கத்தை யார் கடத்தி வந்தவர்கள் என்பது பற்றியும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.விமான நிலைய குப்பைத்தொட்டியில் கடத்தல் தங்கத்தை வீசி சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்