13-ம் நூற்றாண்டு மன்னர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

திருப்பாலப்பந்தல் சிவன் கோவிலில் 13-ம் நூற்றாண்டு மன்னர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Update: 2022-12-28 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருநாகீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கள ஆய்வு செய்த போது கோவில் வளாகத்தில் இரு மன்னர் சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது திருநாகீஸ்வரர் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சோழர் காலம் முதல் விஜயநகர பேரரசு காலம் வரையிலான 42 கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு மன்னர் காலங்களில் திருநாகீஸ்வரர் கோவிலுக்கு செய்யபட்ட திருப்பணிகளை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சூரியதேவன், எதிரிகள் நாயகன், சோழகங்கதேவன் எனும் பெயர்களால் அழைக்கப்படும் சூரியன் நீரேற்ற பெருமாள். எலவனாசூர்கோட்டையை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தியவர். கிளியூர் மலையமான் வழித்தோன்றல். மற்றொருவர் பொன்பரப்பினான் ராசராச தேவனான மகதேசன். சேலம் மாவட்டம் ஆறகளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர். இவரது தாயார் புண்ணியவாட்டியின் சொந்த ஊர் திருப்பாலப்பந்தல் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்காணும் மன்னர் காலங்களில் (13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) திருநாகீஸ்வரர் கோவிலுக்கு நிலதானம் உள்ளிட்டத் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.கோவில் வளாகத்தில் ஆய்வு செய்தபோது பலகை கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும், தனிக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும் இருப்பது கண்டறியப்பட்டது. கைகளை கூப்பி வணங்கிய நிலையில் நின்றிருக்கும் இந்த சிற்பங்கள் சூரியன் நீரேற்ற பெருமாள், மகதேசன் ஆகியோருக்கு உரியதாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட இந்தச் சிற்பங்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோவில் நிர்வாகி முத்துரங்கநாதன் உடன்ருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்