கல்லூரி பஸ்-லாரி மோதலில் 13 மாணவிகள் படுகாயம்

தானிப்பாடி அருகே தனியார் கல்லூரி பஸ், லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் 13 மாணவ-மாணவிகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-08 13:28 GMT

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே தனியார் கல்லூரி பஸ், லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் 13 மாணவ-மாணவிகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ராவந்தவாடி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரில் சுற்ற வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். தூரத்தில் இருந்து படிக்க வரும் மாணவ-மாணவிகளை அழைத்து வர கல்லூரிக்கு சொந்தமான பஸ்கள் உள்ளன.

அந்த கல்லூரி பஸ்களில் ஒன்று ரெட்டியார் பாளையம், சின்னியம்பேட்டை, மேல்பாச்சார், குபேரபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டி.வேலூர் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.

தானிப்பாடி சந்தைமேடு மலைப்பகுதியில் வரும் போது, அந்த வழியாக எதிரே எம்.சாண்ட் ஏற்றி வந்த ஒரு லாரியும், கல்லூரி பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

15 பேர் படுகாயம்

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகளை மீட்டனர். அதில் 13 மாணவ-மாணவிகளும், கல்லூரி பஸ் டிரைவர் குபேந்திரன் மற்றும் லாரி டிரைவர் ரவி (63) என மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்கை்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

4 மாணவிகளுக்கு மேல் சிகிச்சை

பலத்த காயம் அடைந்த மாணவிகளான ஜெயலட்சுமி (19), அன்னலட்சுமி (20), இந்து (20), நிஷா (19) ஆகிய 4 பேரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தானிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்