13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம்

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி விடுதியில் 13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்தனர். இது தொடர்பாக பழனி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தினார்.

Update: 2022-06-16 13:09 GMT

வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டையில் தனியார் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை விடுதியில் இருந்த நித்தியகுமார் (18), சோபனா (18), கோகுல்நந்தினி (18), நிவேதா (18), சங்கரி (19), தமிழரசி (19) உள்ளிட்ட 13 மாணவ-மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் சிகிச்சை முடிந்து கல்லூரி திரும்பினர். மீதமுள்ள 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் நேற்று மதியம் அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, கல்லூரி விடுதியில் காலை உணவு வழங்க தாமதம் ஆனதால் பசியால் மயங்கியதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையிலான அந்த கட்சியினர் மருத்துவமனைக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினர். மேலும் இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்