12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என மதுரையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-04-23 20:36 GMT


12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என மதுரையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டி

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ள தொழிலாளர் சட்ட மசோதா, தொழிலாளர்களுக்கு எதிரானது. 8 மணி நேர பணி, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் தூக்கம். இது இருந்தால் தான் அந்த ஊழியர்கள் சரியாக பணி செய்ய முடியும். ஆனால், மனிதர்களை எந்திரமாக நினைத்து விட்டார்கள். 12 மணி நேர வேலை என்பது மனித வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல. இந்த சட்ட மசோதாவிற்கு, தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்றால், இதனுடைய ஆழம் என்ன என்பதை தி.மு.க. அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்த சட்டத்தை எதிர்த்தார். ஆனால், தற்போது ஆதரிக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை குறித்து 2 மணி நேரம் பேசினேன். ஆனால், அதுசம்பந்தமான எந்த செய்தியும் வெளியாகவில்லை. தமிழக மக்களின் பிரச்சினைகளை புள்ளிவிவரங்களாக எடுத்து வைத்தேன். அதைப்பற்றி எதுவும் வெளிவராமல் தி.மு.க.வினர் தடுத்து விட்டனர்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குரலின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ புனையப்பட்டதா, இல்லையா என்பதை அவரே எப்படி கூற முடியும். 30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயமல்ல. அவ்வளவு பணம், ஊழல் செய்யப்பட்டதாக நிதி அமைச்சரே வாக்குமூலம் அளித்ததாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். வலைதளங்களில் வந்ததை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் இதுகுறித்து பேசவேண்டாம் என அறிக்கை வெளியிட்ட பின்பு தான் எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அந்த ஆடியோவில் இருப்பது அவரது குரல்தான். ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை எங்கு வைப்பது என திணறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

இதுகுறித்து மத்திய அரசிடம் முழு விசாரணை நடத்த வலியுறுத்துவோம். தமிழக கவர்னரிடமும் இதனை கொண்டு சமர்பிப்போம். இந்த ஆடியோ போலி என முதல்-அமைச்சர் அறிக்கை விட வேண்டியதுதானே. கடந்த 2 வருடங்களில் இவ்வளவு பணத்தை கொள்ளையடித்ததை நினைத்து பார்க்கும்போதே அதிர்ச்சி அளிக்கிறது.

ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க. எங்களிடம் உள்ளது. நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை கொடுத்து விட்டது. தேர்தல் ஆணையமும் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கட்சிகொடி, சின்னத்தை பயன்படுத்துகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் கொடுத்தது தி.மு.க. அரசு. அதில் தொடர்புடையவர்களுக்கு தி.மு.க. ஆதரவாக வாதாடி வருகிறது.

கூட்டணி குறித்து மோடியுடன் பேசுவோம்

பா.ஜனதாவுடன் எங்கள் கூட்டணி சிறப்பாக இருக்கிறது. கூட்டணி குறித்து பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் பேச வேண்டியதில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, திருப்பத்தூர் நெற்குப்பை பேரூர் செயலாளர் இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியை மதுரை மாநகர் மாவட்டம், கிழக்கு புறநகர் மாவட்டம், மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்