பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரெயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை - தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு

பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரெயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை அடித்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-10-14 14:33 IST

திருவள்ளூர் தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள் (90), மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன் (48), மருமகள் ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இவர்களது வீட்டில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேசன் (30) லட்சுமி (25) தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். புதிதாக வாடகைக்கு குடி வந்த இந்த தம்பதியினர் சுசீலா குடும்பத்தாருடன் நல்ல முறையில் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுசீலா வீட்டுக்கு வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி அங்கிருந்த சுசீலாவிற்கும் அவரது தாயார் முனியம்மாளுக்கும் பால் குடிக்க கொடுத்துள்ளார்.

அதேநேரத்தில் கணேசன் வீட்டில் இருந்த பார்த்திபன் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு பிரியாணியும், மதுவும் வாங்கி கொடுத்துள்ளார். பார்த்திபனின் மனைவி ஹேமாவதி, மகன் ஹரிஹரனை அழைத்துக்கொண்டு இரவு பணிக்கு சென்று விட்டார். மற்றொரு அறையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாலதி இருந்தார்.

பணி முடிந்து ஹேமாவதி தன் மகன் ஹரிஹரனுடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சுசீலா, முனியம்மாள், பார்த்திபன், சீனிவாசன் ஆகியோர் ஆங்காங்கே மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். வீட்டில் வாடகைக்கு இருந்த கணேசன், லட்சுமி தம்பதி பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சுசீலா அணிந்து இருந்த தங்கச்சங்கிலி, வளையல், மோதிரம் என 11 பவுன் தங்கநகைகளை திருடி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஹேமாவதி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆந்திர மாநில தம்பதியினரான கணேசன், லட்சுமி ஆகியோரை வலைவீசி தெடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில்சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி ஆகியோர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள், வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கணேசன் அவரது மனைவி லட்சுமி ஆகியோரின் உருவங்கள் பதிவாகியுள்ளதா என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்