சுகாதாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¾ லட்சம் மோசடி

சுகாதாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-09-24 03:03 IST

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் ஜோஸ்பின். இவருடைய பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்தபிறகு மீண்டும் பணி கிடைக்க காத்திருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான பெண், அவரிடம் பணம் கொடுத்தால் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளில் அரசு வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜோஸ்பின் மற்றும் அவருடன் சேர்ந்து28 பேர் தலா ரூ.42 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11 லட்சத்து 76 ஆயிரத்தை கும்கோணத்தை சேர்ந்த ஒரு நபரிடம் கொடுத்துள்ளனர். அந்த நபர் கடந்த ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் பணம் கொடுத்தவர்களை வரவழைத்து நேர்முகத்தேர்வு நடத்தியுள்ளார். இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆனால் ஒருவருட காலமாகியும் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு பணி கிடைக்காததால் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தனர்.

இந்த புகார் மனு தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்