6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடன்
விழுப்புரத்தில் 6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடனை கலெக்டர் மோகன் வழங்கினார்.
வளவனூர்
மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி வங்கிகள் மூலம் 75-ம் ஆண்டு சுதந்திர விழா அமுத பெருவிழா கொண்டாடும் வகையில் ஜூன் 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தை வாடிக்கையாளர்கள் வாரமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் இணைந்து மாவட்டம் தோறும் இந்த விழாவை நடத்துகிறது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் விழுப்புரத்தில் நடந்தது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, அனைத்து வங்கிகள் சார்பில் 6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடியே 37 லட்சம் கடன் உதவியை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சங்கர், இந்தியன் வங்கி பொதுமேலாளர் சந்திரசேகரன், புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடாஜலம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் சீதாராமன், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் ரத்தினராஜ், பொது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், தாட்கோ மாவட்ட மேலாளர் குப்புசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, மாவட்ட செயலாளர் வாழ்ந்து காட்டுவோம் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசினர். முன்னதாக இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். விழா ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் தலைமையில் அனைத்து வங்கியினர் செய்திருந்தனர். முடிவில் விழுப்புரம் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இயக்குனர் அனிதா நன்றி கூறினார்.