தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகபெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருநீறு, இளநீர், தயிர் மற்றும் பல்வகை பழங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம், பச்சை மாணிக்க மரகத கல், தங்க வேல், தங்க கீரிடம் மற்றும் தங்க ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலின் உப கோவிலான நந்தி ஆற்றின் அருகில் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் காலை 6 மணிக்கு கோட்ட ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது.
கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து 1008 பால்குட ஊர்வலத்தை காலை 9 மணிக்கு முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பெரிய தெரு, கீழ்பஜார், ஜோதிசுவாமி கோவில் தெரு, கந்தசாமி தெரு, ம.பொ.சி சாலை, சரவணப்பொய்கை வழியாக திருத்தணி மலைக் கோவிலை வந்தடைந்தது. பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, மற்றும் கோவில் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து இரவு சுவாமி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.வீடுகளில் பொதுமக்கள் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பக்கத்தில் உள்ள நாகாலம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு 108 பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினார்கள்.