ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் நாளை மறுநாள் காலை 9.30 மணி அளவில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-26 19:42 GMT

திருச்சியில் நாளை மறுநாள் காலை 9.30 மணி அளவில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,000 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்தவகையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசுமுறை சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார்.

சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை 8.30 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு, அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

பின்னர் முதல் நிகழ்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணி அளவில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மகளிர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என சுமார் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் சுமார் ரூ.1,000 கோடிக்கு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காகித ஆலையை பார்வையிடுகிறார்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, பகல் 12.30 மணிஅளவில் மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி டி.என்.பி.எல்.காகித ஆலைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலகினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பு இந்த காகித ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் கரூர் மாவட்டம் புகழூர் காகித ஆலையில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த புதிய அலகின் மூலம் மூலப்பொருட்கள் அங்கேயே உற்பத்தி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் ஆலையை சுற்றி பார்க்கிறார். இதன் தொடர்ச்சியாக அங்குள்ள 3 புதிய சிப்காட் தொழிற்சாலைகளை தொடங்கி வைத்தும், பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3 மணி அளவில் மணிகண்டம் அருகே சன்னாசிப்பட்டிக்கு வருகை தருகிறார்.

மக்களை தேடி மருத்துவத்திட்டம்

அங்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்குகிறார். பின்னர் அதே கிராமத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதை பார்வையிட உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

மேலும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கிற இடைநிலை சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 10 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் கருவி வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மக்களை தேடி மருத்துவத்திட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் திருச்சி விமானநிலையத்துக்கு வந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விமானநிலையத்தில் இருந்து முதல்-அமைச்சரின் கார் செல்லும் வழித்தடம் மற்றும் விழா நடைபெறும் அரங்கம் என அனைத்து இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் விழா நடைபெறும் இடத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்