நெடுஞ்சாலை துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

நெல்லை பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலை துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-16 21:34 GMT

நெல்லை பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலை துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் அதிகாரி

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி தேவி. இவர் நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

தேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நகை கொள்ளை

நேற்று முன்தினம் அதிகாலையில் தேவி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து உடனடியாக பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

100 பவுன்

வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலை துறை பெண் அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்