100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் மறியல்
வருகை பதிவேடு எடுக்காததால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பணித்தள பொறுப்பாளர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான வருகை பதிவேடு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் பெரம்பலூர்- வேப்பூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் சுதந்திரா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வருகை பதிவேடு எடுத்தார்.
இதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.