ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர்.

Update: 2023-07-26 19:58 GMT

விருத்தாசலம், 

ரகசிய தகவல்

விருத்தாசலம் பாலக்கரை அருகே தானாராம் (வயது 45) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து குடோனுக்குள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் ஏட்டுகள் ராஜசேகர், மணிகண்டன் மற்றும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு ஏட்டுகள் பாலகிருஷ்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் விருத்தாசலம் பாலக்கரை தெப்பக்குளம் அருகே உள்ள தானாராமுக்கு சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டனர்.

31 மூட்டைகள்

அப்போது அங்கே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் 31 மூட்டைகளில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

விசாரணையில் தானாராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து குடோனில் பதுக்கி வைத்து பின்னர் கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது.

கைது

இதையடுத்து தானாராமை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 31 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்ததோடு, குடோனுக்கும் சீல் வைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்