1½ டன் ரேஷன் அரிசி, 1000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி, 1000 லிட்டர் மண்எண்ணெய்யை குளச்சலில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-20 18:09 GMT

குளச்சல், 

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி, 1000 லிட்டர் மண்எண்ணெய்யை குளச்சலில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

போலீசார் ரோந்து

தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் சைமன்காலனி பாலம் அருகே வந்த போது அங்கு தோட்டத்தில் ஒரு கூண்டு வேன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. போலீசார் அதன் அருகே சென்றதும், வேன் டிரைவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்,

பின்னர் வேனை திறந்து பார்த்தபோது அதில் சிறு, சிறு மூடைகளில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசிைய பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசியையும், பிடிபட்ட வேன் டிரைவர் பரக்குன்றை சேர்ந்த சத்யாவையும் (வயது28) உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மண்எண்ணெய் பறிமுதல்

இதுபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு குளச்சல் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின், ஏட்டுக்கள் வில்சன், செல்வகுமர் ஆகியோர் லியோன் நகரில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டு காம்பவுண்டுக்குள் 31 பிளாஸ்டிக் கேன்களில் 1000 லிட்டர் மானியவிலை மண்எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்