314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி - அதிமுக அறிவிப்பு

“மே” தினத்தையொட்டி 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவியை அதிமுக வழங்க உள்ளது.

Update: 2023-05-08 11:00 GMT

கோப்புப்படம்

சென்னை,

"மே" தினத்தையொட்டி 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவியை அதிமுக வழங்க உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைப்போர் திருநாளாம் "மே" தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டையும், இந்த ஆண்டையும் சேர்த்து, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும்; போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000/- ரூபாய் வீதம், மொத்தம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான நிதியுதவி 17.05.2023 - புதன் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகையில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்