151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாணாபுரம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு 151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வாணாபுரம்
திறப்பு விழா
வாணாபுரம் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா வாணாபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தீபா அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்து வாணாபுரம் தாலுகா கையேட்டை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். தொடர்ந்து வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
314-வது தாலுகா
தமிழ்நாட்டில் 314-வது தாலுகாவாக வாணாபுரம் தாலுகா தொடங்கப்பட்டுள்ளது. இந்த தாலுகா வரை படத்தை கலெக்டர் என்னிடம் காண்பித்தார். அதை நான் பார்த்த போது வாணாபுரம் கிராமம்தான் தாலுகாவின் மையப்பகுதியாகவும், அனைத்து கிராமங்களுக்கும் பொதுவாகவும் உள்ளதால் இதை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே தாலுகாவின் மையப்பகுதியில் அலுவலகம் செயல்பட்டால் தான் இப்பகுதி கிராமங்களின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும்.
தாய் உள்ளத்தோடு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்தியாவில் யாரும் செய்யாத திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளார். காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
அரசு அலுவலகங்கள்
இன்று வாணாபுரம் தாலுகாவை தொடங்கி வைத்துள்ளேன். அதைத் தொடர்ந்து இப்பகுதியில் அரசு மருத்துவமனைகள், அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், நுகர் பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்கள், கட்டிடங்கள் அமைத்து தர தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பேசும்போது, வாணாபுரம் தாலுகா அமைக்க வேண்டி கடந்த 7 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உதவியால் வாணாபுரம் தாலுகா அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாணாபுரம் தாலுகாவை தொடங்கி வைத்தார். தொடா்ந்து இன்று அமைச்சர் தனியார் கட்டிடத்தில் தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். விரைவில் மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலையால் ஏற்பட்டுள்ள கரி துகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், ஜெய்கணேஷ், வாணாபுரம் தாசில்தார் குமரன், கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை, வாணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தீபா அய்யனார், துணை தலைவர் வசந்தி ராஜா உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், கிராமமக்கள், அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.