ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மக்களை தேடி மருத்துவம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், மருத்துவ உபகரண கருவிகள் வழங்குதல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஒரு கோடியே 1-வது பயனாளியான சன்னாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு (வயது 60) மருந்து பெட்டகத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது கணவர் துரை (67) இத்திட்டத்தில் பக்கவாதத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிற நிலையில் அவரிடமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அதனைதொடர்ந்து அம்மன் கோவில் திடலில் ஆலமரத்து அடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத்துறை சார்பில் ரூ.12 கோடியே 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
புற்றுநோய் சிகிச்சை கருவி
இதைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.4½ கோடியில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை கதிரியக்க டெலிகோபால்ட் கருவி, தாம்பரம் அரசு காசநோய் மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் அதிநவீன சி.டி.ஸ்கேன் கருவி ஆகிய மருத்துவ கருவிகளின் சேவைகளை தொடங்கி வைத்தார். வருகிற 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் காசநோய் மற்றும் மருந்து எதிர்ப்பு காசநோய் கண்டறியும் கருவி அமெரிக்காவில் இருந்து 46 எண்ணிக்கையில் வாங்கப்பட்டதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேசிய தர சான்றிதழ்
தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற்ற தேசிய தர சான்றிதழ்களை மருத்துவ அலுவலர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் சாதனை விளக்க குறும்படம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து அவர் கையசைத படி சென்றார். ஒரு சிலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதனை வாங்கி அவர் உதவியாளர்களிடம் கொடுத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நன்றி கூறினார்.