பால் விலை உயர்வை கண்டித்து 32 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Protest

Update: 2022-11-15 17:11 GMT

பால் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 32 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சபாபதி முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், அவற்றை திரும்பபெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் முத்துகுமார், வேல்முருகன், சிம்மராஜா, முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வடமதுரை கிழக்கு மண்டல பா.ஜ.க. சார்பில் பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடமதுரை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமிநாயுடு முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன் கண்டன உரையாற்றினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பழனி, ஆயக்குடி

பழனி பஸ் நிலையம் அருகே வேல் ரவுண்டானா பகுதியில் நகர தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நகர பொதுச்செயலாளர் ஆனந்த்குமார், நிர்வாகி சேது உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, பால் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோல் ஆயக்குடி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாணார்பட்டி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கோபால்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை தலைவர்கள் லட்சுமணன், வீரஜோதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் தாமஸ், ஒன்றிய பொதுச் செயலாளர் கெப்பையன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நத்தத்தில் ஒன்றிய தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குஜிலியம்பாறை, நிலக்கோட்டை

குஜிலியம்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய பொதுச்செயலாளர் கலைமணி, மாவட்ட பொது செயலாளர் ஜெயராமன், மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, பால் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நிலக்கோட்டையில், வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பொம்முசுப்பையா, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பட்டம், விக்னேஷ், ஒன்றிய செயலாளர் ராணி கருப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பால் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் 32 இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்