டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு: கரூர் மாவட்டத்தில் 4,168 பேர் எழுதுகின்றனர்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 4,168 பேர் எழுத உள்ளனர்.

Update: 2022-11-15 18:56 GMT

எழுத்துத்தேர்வு

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி 1) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 17 மையங்களில் மொத்தம் 4,168 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வு கூடங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

5 நடமாடும் குழுக்கள்

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நாளில் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 5 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு நாளான 19-ந்தேதி காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்து சேர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்