உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலைமறியல்

உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலைமறியல்

Update: 2023-02-19 19:43 GMT

கட்டுமான பணியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி கும்பகோணத்தில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கல்லூாி மாணவர்

கும்பகோணம் அருகே உள்ள மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகையன். இவருடைய மகன் சண்முகம்(வயது20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தாா். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் விடுமுறை நாளில் கட்டிடப் பணிகளுக்கு சென்று வருவது வழக்கம்.

பழியஞ்சியநல்லூர் கீர்த்திமானாறு அருகில் மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்டு தடுப்பு சுவர் கட்டும்பணியின் போது சண்முகம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் கட்டிட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்தது.

பரிதாப சாவு

இதில் எந்திரத்துக்கு இடையில் சிக்கிய சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 கிரேன்கள், பொக்்்லின் எந்திரங்கள் மூலம் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி கவிழ்ந்த கனரக வாகனத்தை அப்புறப்படுத்தி சண்முகத்தின் உடலை மீட்டனர். சண்முகம் உடல் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று உயிரிழந்்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவிடைமருதூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்