விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விழுப்புரத்தில் தி.மு.க.விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 3 அமைச்சர்கள் பரிசு வழங்கினர்.
விழுப்புரம்,
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவில் இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாநில கைப்பந்து கழக தலைவரும், கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளருமான டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். இறகு பந்தாட்ட கழக தலைவர் பாலாஜி, ஹாக்கி கழக செயலாளர் அருள்எட்வின், கூடைப்பந்து கழக செயலாளர் ராஜா, இறகுப்பந்து கழக செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரிசு
சிறப்பு அழைப்பாளர்களாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக அனைத்து விளையாட்டு கழகங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், நகர செயலாளர் ரா.சக்கரை, நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி பிரபு, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.