தமிழகம் முழுவதும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்: மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? சென்னை போராட்டத்தில் குஷ்பு கேள்வி
மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் 1,100 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோட்டில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
சென்னையில் மட்டும் 66 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்த மாட்டோம் என்றார்கள். ஆனால், இப்போது என்ன நடக்கிறது?. மின் கட்டண உயர்வு 'ஷாக்' அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம். மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறியுள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை மிக மோசமாக பேசினார்கள். அதுபற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால், இதுவரை அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.
இதேநிலை, தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா?, வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாடவிடாமல் போராட்டம் நடத்துவார்கள். இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்றுத்தருகிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள். தமிழ், தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார்.
இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது, தொடரும். மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் தாமரை மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையிலும், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ் தலைமையிலும், திருவொற்றியூரில் மேற்கு மண்டல தலைவர் பாலு தலைமையிலும், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் மண்டல தலைவர் சரவணன் தலைமையிலும், பெரம்பூர் ரெயில்வே நிலையம் எதிரில் வடசென்னை மேற்கு மாவட்ட மண்டல துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமையிலும், திரு.வி.க.நகரில் மத்திய மண்டல தலைவர் ராஜ்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பத்தூரில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் தலைமையிலும், மடிப்பாக்கத்தில் பா.ஜ.க.மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலும், ஆலந்தூர் ஆசர்கானா சந்திப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே.எம்.சாய், சத்யன் ஆகியோர் தலைமையிலும், சிட்லபாக்கத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையிலும் பா.ஜ.க.சார்பில் பம்மல், பெருங்களத்தூர், பீர்க்கங்காரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பொழிச்சலூர், திருநீர்மலை என 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.