பூட்டுபோட முயற்சி
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் இருந்து சுத்தமல்லி செல்லும் பிரிவு சாலையில் குடியிருப்பு பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி, அரசு அலுவலகங்கள் அருகே செயல்படுவதால் இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் சிரமத்திற்கு ஆளாவதும், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாலும் இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் பிரச்சினைக்குரிய அரசு டாஸ்மாக் கடையை மாற்றம் செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று சுத்தமல்லி பிரிவு சாலையில் ஊர்வலமாக வந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அப்போது டாஸ்மாக் கடை முன்பு திரண்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உமாதேவி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தை
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 தினங்களுக்குள் பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு சுமுகமாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.