தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
தேவகோட்டையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை கல்வி) மீண்டும் ஏற்படுத்த வேண்டும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தங்கு தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
கோஷங்கள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் கண்ணன், மாவட்ட செயலாளர் சிவகுமார், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பீட்டர் ஆகியோர் பேசினர்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான சங்கர் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.