கிளாம்பாக்கம் பஸ் நிலைய இறுதி கட்டப் பணிகள் தீவிரம்; பொங்கல் பண்டிகைக்கு பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
புதிய புறநகர் பஸ் நிலையம்
சென்னை மற்றும் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் மிக பிரமாண்டமான முறையில் அனைத்து சகல வசதிகளுடன் கூடிய புதியதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தர்.
பணிகள் மும்முரம்
அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையத்தை திறந்து வைப்பதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்ற வருவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் மிக வேகமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பஸ் நிலையம் வெளிப்புறத்தில் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.