சென்னை கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக மைய பணிகள் எப்போது தொடங்கும்?

சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்பதை விற்பனையாளர்கள், மீன் வளர்ப்பு பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-24 09:48 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி என்ற வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றிருக்கும் கொளத்தூர், ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை சந்தை அமைந்துள்ள இடம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து விதவிதமான வண்ண மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மீன்கள், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவம்பேடு போன்ற பகுதிகளில் 4 ஆயிரம் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன்கள் வளர்ப்பு குட்டையில் பராமரிக்கப்பட்டு கொளத்தூர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.

கொளத்தூர் பாடசாலை தெரு, தெற்கு மாடவீதி ஆகிய 2 தெருக்களின் இருபுறங்களிலும் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் 300-க்கும் மேற்பட்ட வகையிலான வண்ண மீன்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 முதல் ரூ.10 லட்சம் வரை விலை உள்ள மீன்கள் இந்த சந்தையை அலங்கரிக்கின்றன.

கடைகளில் மட்டுமின்றி தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்வது போல் அழகிய வண்ண மீன்கள் பாக்கெட் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீன்களை வளர்ப்பதற்கான கண்ணாடி குவலைகள், மீன் தொட்டியை அலங்கரிக்கும் பொருட்களும் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மீன் தொட்டிகளில் பொருத்தக்கூடிய மின் மோட்டார்கள் உள்பட கருவிகள் சீனாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.100 கோடி அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

கொளத்தூர் சந்தையில் வண்ண மீன்கள் விற்பனைக்கு போட்டியாக நாய்குட்டிகள், பூனை குட்டிகள், லவ் பேட்ஸ் போன்ற செல்லப்பிராணிகள் விற்பனை கடைகளும் நிறைந்துள்ளது. இங்கு மலிவான விலையில் அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீன் வளர்ப்பு பிரியர்கள் படையெடுத்து வருகிறார்கள். தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களும் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தையின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

பிரசித்திபெற்ற இந்த சந்தை, குடியிருப்புகள் மத்தியில் அமைந்திருப்பதால் போக்குவரத்து இடையூறு பிரச்சினை தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், வண்ண மீன்கள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் சென்னை கொளத்தூரில் ரூ.50 கோடி செலவில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு மீன்வளத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து மீன்கள் வர்த்தக மையம் அமைப்பதற்காக பாடி மேம்பாலம் அருகே உள்ள சிங்காரவேலன் பள்ளி அருகாமையில் அகஸ்தீஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆய்வு செய்தார்கள்.

அதன்பின்னர் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் எந்தவொரு வேலையும் நடைபெறாமல் அப்பகுதி தொடர்ந்து வாகன நிறுத்தும் இடமாக காட்சி அளிக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு வண்ண மீன்கள் விற்பனை- உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.ராஜராஜன் கூறியதாவது:-

கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தையை மேம்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று சட்டமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து, கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டபோது நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்.

ஆனால் இதுவரையில் பணிகள் தொடங்காமல் இருப்பது வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. எனவே இப்பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இந்த மையத்தில் வண்ண மீன்கள் விற்பனை கடைகளுக்கு மட்டுமின்றி செல்லப்பிராணிகள் விற்பனை கடைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைய உள்ள பகுதியில் சாலைவசதி முறையாக இல்லை. எனவே பணிகளை தொடங்குகிற போது சாலைவசதியையும் மேம்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொளத்தூரில் 'பியூட்டி பார்லர்' நடத்தி வரும் அழகு கலை நிபுணர் ஈவ்லின்:-

வண்ண மீன்கள் வளர்ப்பு கண்களுக்கு விருந்து அளிக்கிறது. மனத்துக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே வீடுகள், ஓட்டல்கள், கடைகள், பியூட்டி பார்லர்கள் போன்ற இடங்களில் வண்ண மீன்கள் வளர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

கொளத்தூரில் உலக தரத்துக்கு நிகராக வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைய இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கொளத்தூர் தொகுதி மீதான மக்கள் பார்வை இன்னும் விரிவடையும்.

இந்த மையம் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மீன் வளர்ப்பு பிரியர்களிடம் அதிகம் இருக்கிறது. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயர் வெஸ்லி:-

நான் மடிப்பாக்கத்தில் இருந்து வண்ண மீன்கள் வாங்குவதற்கு கொளத்தூருக்குதான் வருகிறேன். காரணம், மடிப்பாக்கத்தில் ஒரு ஜோடி வண்ண மீன்கள் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கே 50 ஜோடி வண்ண மீன்கள் ரூ.130-க்கு கிடைக்கிறது.

இவ்வளவு விலை மலிவாக கிடைப்பதால் சிரமம் பார்க்காமல் வந்து செல்கிறேன். அதே போன்று மீன்வளர்ப்புக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது.

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் வர்த்தக அமைய இருப்பது என்னை போன்ற மீன் வளர்ப்பு பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பணிகளை விரைந்து முடிந்து பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும்.

எப்போது பணிகள் தொடங்கும்?

கொளத்தூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி அர்ஷினி:-

வீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும். கண்ணாடி தொட்டிக்குள் மீன்கள் விளையாடுவது, சண்டை போடுவது என்று மனிதர்கள் போல் மீன்கள் செய்யும் சேட்டையை ரசிப்பேன்.

இந்த வண்ண மீன்கள் சந்தையை சுற்றி பார்த்தாலே அவ்வளவு ஜாலியாக இருக்கிறது. அனைத்து வண்ண மீன் கடைகளும் ஒரே இடத்தில் வந்தால் இன்னும் ஜாலியாக இருக்கும். இந்த மீன்கள் மையம் அமைந்தவுடன் நான் அடிக்கடி செல்வேன்.

கொளத்தூர் வண்ண மீன்கள் வியாபாரி சந்தோஷ்:-

கொளத்தூரில் உள்ள வண்ண மீன்கள் விற்பனை கடைக்கு மாத வாடகை அதிகமாக உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் இருக்கிறது.

தமிழக அரசு அறிவித்தபடி வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்பட்டால் அங்கு குறைந்த வாடகையில் எங்களுக்கு கடைகள் கிடைக்கும். விசாலமான இடம் என்பதால் வாடிக்கையாளர்களும் அதிகம் வருவார்கள். இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் இன்னும் மேம்படும். எனவே இந்த மையம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்கிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது வண்ண மீன்கள் விற்பனையாளர்கள், மீன் வளர்ப்பு பிரியர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்