கண்ணாடிகளின் வீடு; ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறை... கைதிகளின் அதிர்ச்சி அனுபவம்

வங்காளதேசத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களில் 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது.

Update: 2024-10-21 05:28 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் சில மாதங்களுக்கு முன் வன்முறையாக வெடித்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தீவிர போராட்டம் தொடர்ச்சியாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தலைநகர் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் புறப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

ஹசீனாவின் பதவி காலத்தின்போது, பலர் காணாமல் போனார்கள். ஹசீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு, ரகசிய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறைகளில் இருந்தபோது, சந்தித்த அனுபவங்களை பற்றி வெளியே கூறியுள்ளனர். இதில், அந்த சிறை பற்றிய சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இந்த சிறைகளை அயினாகோர் என அழைக்கின்றனர். கண்ணாடிகளின் வீடு என அதற்கு பொருள். 2009-ல் ஹசீனாவின் ஆட்சி தொடங்கிய பின்பு, நூற்றுக்கணக்கானோரை பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர். சில சமயங்களில் அரசுக்கு எதிராக சிறிய அளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட சிக்கினர்.

அவர்களில் பலர் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு விட்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சிலர் ரகசிய ராணுவ தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர். அதுவே அயினாகோர் என அழைக்கப்பட்டது என தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

ஹசீனா, அரசுக்கு சவாலாக இருக்கும் யார் ஒருவரையும் கட்டுப்படுத்தி அரசை ஒழுங்குப்படுத்தி வைத்திருந்திருக்கிறார் என நம்பப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே, இந்த காணாமல் போகும் நிகழ்வும் நடந்துள்ளது என அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்திற்கு மேலே காலையில் ராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது என கூறுகின்றனர். சிறையில் உள்ளவர்களால், அவர்களை தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அதுவும் கண்ணாடிகளின் வீடு என பெயர் வருவதற்கு ஏதுவாகி விட்டது. விசாரணையின்போது, உடல்ரீதியாக நேரடியான சித்ரவதைகளை கைதிகள் சந்தித்தனர்.

அவர்களுக்கு சீராக சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கைதிகளுக்கு முடி வெட்டி விடப்படும். அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதே முக்கிய இலக்காக இருந்தது என தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

வழக்கறிஞர் அகமது பின் காசிம் 2016-ல் பிடிக்கப்பட்டார். அவருடைய கண்களையும், கைகளையும் கட்டி சிறையில் வைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே வந்ததும், முதன்முறையாக புதிய காற்றை சுவாசிக்கிறேன் என்றார். கொல்லப்பட்டு விடுவோம் என்று அவர் பயந்து போய் இருந்திருக்கிறார்.

சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை. வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதுதவிர, எல்லா நேரமும் காசிமுக்கு உலோகத்திலான கைவிலங்கு போடப்பட்டு இருந்தது.

இந்த சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும். சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும். அது காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்கு கேட்க கூடாது என்பதற்காகவும், கைதிகளை பைத்திய நிலைக்கு தள்ளுவதற்காகவும் இதுபோன்ற விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

ஒரு நாட்டை வழிநடத்தி செல்லும் பெண் தலைவராக ஹசீனா இருந்தபோதும், அரசை கட்டுக்கோப்புடன் கொண்டு செல்வதற்காக இதுபோன்ற வழிகளை அவர் கையாண்டு இருக்கும் தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்