உங்கள் உடம்புக்கு என்ன..? சில சந்தேகங்களும்... விளக்கங்களும்...! - சித்த மருத்துவ நிபுணர்

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ  நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.

Update: 2022-12-29 05:17 GMT


கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி,

86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

கேள்வி: 10 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. மேலும் பாதங்கள் உள்பக்கம் மதமதப்பாகவும், குதிகால் தசைகளில் வலியும் உள்ளது. இதற்கு சித்த மருந்துகள் உண்டா? (மு. சுலைமான்கான், தஞ்சாவூர்).

பதில்: நீண்டகால நீரிழிவு நோயினால் கால்களிலும், பாதங்களிலும் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும், கால் தசைகள் வலியாகவும், சோர்வாகவும் காணப்படும்.

இதற்கான சித்த மருந்துகள்: 1) ஆவாரைப் பூ குடிநீர் பொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும். 2) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. அளவு காலை, இரவு எடுக்க வேண்டும். 3) மதுமேக சூரணம் 1 கிராம் அல்லது மதுமேக சூரண மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும். 4) கால் மதமதப்பு, தசை வலி நீங்க: அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுக்க வேண்டும். வாத கேசரி தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை கால்களிலும் பாதங்களிலும் நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகச் சிறந்தது. 5) ரத்த அழுத்தம் குறைய உணவில் உப்பு, ஊறுகாய் இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். வெண்தாமரை இதழ் சூரணம், அல்லது அசைச் சூரணம் 1 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிட ரத்த அழுத்தம் குறையும்.

கேள்வி: எனக்கு மலம் கழிக்கும் போதெல்லாம் ஆசனவாயில் பக்கவாட்டுச் சதை வெளியே வருவதும், மலம் கழித்த பின்பு உள்ளே தள்ளியும் சென்று விடுகிறது. பூரண குணமடைய என்ன மருந்து சாப்பிடலாம். (எஸ். சிவசண்முகவேல்), மூலம் நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சைகள் என்ன? (முத்து, நாமக்கல்).

பதில்: மூல நோய் ஏற்படும் காரணத்தை 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று தேரையர் சித்தர் கூறுகிறார். வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது.

இந்த நோய்களை குணமாக்கும் சித்த மருந்துகள்: 1) திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும். 2) கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலா ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும். 3) நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும். 4) மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

உணவுகள்: துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம். கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம் இரு முறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

கேள்வி: சளி, இருமல், தும்மல், தொண்டை கரகரப்பு அடிக்கடி வருகிறது. குளிர் காலத்தில் இது அதிகமாக உள்ளது. இதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் என்ன? (இதே கேள்வியை நாகப்பட்டினம் சு.சுதாகரன், பாண்டிச்சேரி து.முருகன் மற்றும் வசந்தா திரிலோகி உள்பட பல வாசகர்கள் கேட்டுள்ளனர்.)

பதில்: குளிர்காலத்தில் உடலின் முக்குற்றங்களுள், பித்தம் அதிகரித்து இருப்பதால் இயல்பாகவே உடலின் வலு சற்று குறைந்திருக்கும். இக்காலங்களில் உடலில் நோய் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ரைனோ வைரஸ், ஃப்ளூ காய்ச்சல் (இன்புளூயன்சா) போன்றவை அதிகமாகப் பரவும். இவை ஒருவரிடம் இருந்து அவர்களின் தும்மல், இருமல் மூலம் மற்றவருக்கு வேகமாக பரவும். ஆகவே, இக்காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

சாதாரண சளி, இருமலுக்கு: 1) ஆடாதோடை இலை - 2, கற்பூரவள்ளி இலை - 2, துளசி இலை - 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து அவற்றைபிழிந்து சாறு எடுத்து தேனுடன் சூடுபடுத்தி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, இருமல் மூலமாக வெளியேறும். 2) தூதுவளை, மிளகு ரசம் வைத்து மதிய உணவை சாப்பிட வேண்டும். 3) சிற்றரத்தை, அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 10 கிராம் அளவில் எடுக்கவும், கொத்தமல்லி 50 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது ஒரு டீ ஸ்பூன் பொடியை எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை நீங்கும். நல்ல பசியைத் தரும். 5) நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் இவைகளும் சிறப்புடையது.

சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் இரண்டு மாத்திரைகளை வாயிலிட்டு மென்று சாப்பிட வேண்டும். துளசி மாத்திரை 1-2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நிலவேம்பு குடிநீர் 30 முதல் 60 மி.லி. வீதம் தினம் ஒருவேளைக் குடிக்கலாம். இது வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. இரவு தூங்கும் முன்பு மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு இவைகளை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குறையும். ஆடாதோடை மணப்பாகு 5 மி.லி. காலை, இரவு இருவேளை குடிக்க வேண்டும்.

கேள்வி: எனது பெயர் த.ஞானசேகரன். வயது 46, புதுச்சேரி. எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. என்னால் மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் பண்ண முடியவில்லை. இதற்கு என்ன சித்த மருந்துகள் சாப்பிடலாம்? (இவரைப் போல பல வாசகர்கள் இதே கருத்துள்ள கேள்வியை கேட்டுள்ளனர்)

பதில்: மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது, அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன்-மனைவி உறவை பிணைக்கக்கூடிய முக்கியமான ஒன்று. உங்களைப்போன்று பலர் இந்த பாதிப்பினால் அவதிப்படுகிறார்கள். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்ய குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

அதற்கான சித்த மருந்துகள்: 1) சாலாமிசிரி லேகியம் ஒரு டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிடலாம். 2) அமுக்கரா லேகியம் காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். 3) பூமி சர்க்கரை கிழங்கு பொடி அல்லது அமுக்கரா பொடி ஒரு டீஸ்பூன், நாக பற்பம் 100 மி.கி., பூரண சந்திரோதயம் 100 மி.கி. கலந்து காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

சிறப்பான தாம்பத்தியத்திற்கு உதவும் உணவுகள்: சைவ உணவுகளில் கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாக்லேட், கருப்பு திராட்சை, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி. அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், முட்டை, பால், வெண்ணெய், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன். பழங்களில்- நேந்திரம், செவ்வாழை, அவகோடா, பேரிச்சை, அத்தி, மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள். இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும். முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்

நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை:

கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்