உங்கள் உடம்புக்கு என்ன..? சில சந்தேகங்களும்... விளக்கங்களும்...! - சித்த மருத்துவ நிபுணர்

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ  நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.

Update: 2022-12-21 08:14 GMT

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி,

86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

கேள்வி: அடிக்கடி வயிற்று புண் வந்து அவதிப்படுகிறேன். இதிலிருந்து விடுபட உங்கள் ஆலோசனை தேவை. (செல்லம், வேளாங்கண்ணி)

பதில்: வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள்.

உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள்.

கேள்வி: சில வருடங்களுக்கு முன்பு எனது வலது காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதற்காக நான் பலவிதமான மாத்திரைகளை உட்கொண்டேன். தற்போது, எனது முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கரும் திட்டுகள் உள்ளது. இதற்கு சித்தமருந்துகள் உள்ளதா? (ஜே. சரவணவேலு, திண்டுக்கல்).

பதில்: முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.

ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும்.

100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும். இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம்.

வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும்.

கேள்வி: எனக்கு வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை வெகு வருடமாக உள்ளது. 2015-ம் வருடம் அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது பயங்கர வலி, காலில் புண்ணும் வருகிறது. வேலைக்கு செல்ல முடியவில்லை, சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? (சதீஷ் ராஜா)

பதில்: வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது.

இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.

சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.

கேள்வி: என் வயது 73. சில நாட்களாக என் வலது கால், இடுப்பிலிருந்து பாதம் வரை ஒரே குடைச்சல் வலியாக உள்ளது. வலி இல்லாமல் இருக்க சித்த மருந்துகள் எவை, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? (இரா.பாலசுப்பிரமணியன், சென்னை)

பதில்: சயாட்டிகா நரம்பு அழற்சி அல்லது முதுகுத் தண்டு வடத்தின் எல் 4, எல் 5, எஸ் 1 தண்டுவட டிஸ்க் பாதிப்புகள் மற்றும் வைட்டமின் டி, கால்சியம் குறைபாட்டால் இதுபோன்ற வலிகள் வரவாய்ப்பு உள்ளது. சித்த மருத்துவத்தில், அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். அடுத்து, சிவப்பு குக்கில் தைலம், கற்பூராதி தைலம் இவைகளை சேர்த்து இடுப்பிலிருந்து கால் பாதம் வரை, நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

கேள்வி: எனது வலது பக்க விரை வீங்கியுள்ளது. இதற்கான சித்த மருந்து என்ன? (ஜான்சன் ஜான்)

பதில்: விரை வீக்கம் என்பது விதைப் பைக்குள்ளே நீர் கோர்ப்பதால் வரும், (ஹைட்ரோசில்) நாளச்சுருள் நோய்களால் வரும் (வெரிக்கோசில்), மேலும், இங்குனல் ஹெர்னியா போன்ற காரணங்களால் வருகிறது. இதற்கு சித்த மருந்துகள், கழற்சி விதைப் பொடி 500 மி.கி., மிளகு பொடி 50 மி.கி. எடுத்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், தனி கழற்சி விதைப் பொடியை முட்டை வெண்கருவில் குழைத்து இரவு நேரத்தில் வீக்கம் உள்ள விரைகளில் பூச வேண்டும், காலையில் வெந்நீர் வைத்து கழுவ வேண்டும்.

சில சந்தேகங்களும்... விளக்கங்களும்

பாதாம் பருப்பு தோல் நீக்கித் தான் சாப்பிட வேண்டுமா?

பாதாம் பருப்பில் உள்ள தோலில் பைட்டிக் அமிலம் மற்றும் டேனின்கள் உள்ளது, இது ஒரு சிலருக்கு ஜீரண குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது.

கொரோனா வந்த பிறகு தலைமுடி உதிர்ந்து போகிறது

கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு வரலாம். இதனால் சிலருக்கு தலை முடி உதிரும். இதற்கு உணவில் கருவேப்பிலை, முருங்கை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, நெல்லிக்காய், முட்டை வெண்கரு, பால் இவைகளை நன்றாக சாப்பிட வேண்டும். சித்த மருந்துகளில் கரிசாலை பொடி 1 கிராம், அயப் பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்குப் பற்பம் 200 மி.கி. எடுத்து காலை, இரவு இருவேளை சாப்பிடலாம். செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.

அடிக்கடி கை-கால்கள் வலி வருகிறது

கால்வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் பொதுவாக வாதகேசரித் தைலம், கற்பூராதி தைலம் இரண்டையும் கலந்து வலி இருக்கும் இடத்தில் தேய்த்து, வெந்நீரில் ஒற்றடம் கொடுத்தால் கை-கால்களில் வரும் வலிகள் தீரும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பூசணி விதை

பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்