உலக புலிகள் தினம்
அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். காட்டில் புலி நடந்து சென்றால் அதன் கம்பீரம் தனி அழகுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம்.
புலிகளை பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை.
மிடுக்காக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.
வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள இந்த புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-ம் ஆண்டில் கடுமையாக குறைந்து 1700ஆக இருந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தேசிய விலங்கான புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. வனவிலங்குகள் சரணாலயங்கள் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டன. அதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வனத்தில் புலி வாழ்கிறது என்றால், அங்கு அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர், பாதுகாப்பு, சுற்றித்திரிவதற்கான பரந்த இடம் இருக்கிறது என்பதை உணரலாம். புலிகள் வாழும் வனப்பகுதி செழுமை நிறைந்த காடுகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்தன. இதுவே 2014-ம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2,967 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில்தான் புலிகள் அதிகம் வசிக்கின்றன. புலிகளின் நடமாட்டம், அவற்றின் எண்ணிக்கை, வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு வனங்களில் நவீன கேமராக்களை கடந்த 2018-ம் ஆண்டு இந்திய வன உயிரின நிறுவனம் நிறுவியது.
இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரகாண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை ஆகிய வனப்பகுதிகளில் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றன. தமிழக வனப்பகுதிகளில் புள்ளிமான், கலைமான், காட்டெருமை அதிகளவில் இருப்பதால்தான், புலிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் 2006-ம் ஆண்டில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
எனவே, வனப்பகுதி அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என, தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ரஷியாவில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் ஜூலை 29-ந் தேதி உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும். மழை, வெயில் காலத்தில் நாம் எப்படி ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுபோல் புலிகளை காப்பாற்றினால் அதற்கு கீழ் உள்ள அனைத்து வன விலங்குகளையும் காப்பாற்றுவதாக அமையும் என்பது வனத்துறையினரின் தாரக மந்திரமாகும். எனவே புலிகளை காப்பது வனத்துறையின் கடமை மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரின் பங்கும் அதில் இருக்க வேண்டும். நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை கொண்டாடுவோம். புலிகளை காப்போம்.